தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 1.நூன்மரபு, பாடம்01 எழுத்துக்களின் வகை

HD1080p தரத்தில் காண்பதற்கும், HD720p தரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கும் http://www.youtube.com/watch?v=RdpWaHs-S4s

உரையாடலுக்கான களம்

தொல்காப்பியர் னகரத்தை ஏன் பின்வைத்தார்?

எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே
எழுத்துக்களின் வகைகளைக் கூறுகின்ற இந்த முதல் நூற்பாவிற்கு உரை கண்ட இளம்பூரணர், “அகரமுதல் னகர இறுவாய்” என்று தொல்காப்பியர் அகரத்தை முன்னும் னகரத்தைப் பின்னும் வைத்தமைக்கான காரணத்தை ஆராய்கின்றார். அகரத்தை முன் வைத்தமைக்குக் காரணம், அகரமானது தானும் இயங்கித் தனிமெய்களையும் இயக்குகின்ற சிறப்பின் காரணமாக முன்வைக்கப்பட்டது என்றும், னகரம் வீடுபேற்றிற்கு உரிய ஆண்பாலை உணர்த்துகின்ற சிறப்பின் காரணமாகப் பின் வைக்கப்பட்டது என்றும் கருத்துரைக்கின்றார்.

இதனோடு ஒத்த கருத்தினையே நச்சினார்க்கினியரும் உரைக்கின்றார், அவர், எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவதற்குக் காரணம், ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்ற தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டிக் கூறுவர் என்று பிற உரையாசிரியர்களைச் சார்ந்து கருத்துரைக்கின்றார். மேலும், வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பால் தொல்காப்பியர் னகரத்தைப் பின்வைத்தார் என்று தம் கருத்தாகக் கூறுகின்றார்.

இவ்விரு கூற்றுக்களிலும் தொல்காப்பியர் அகரத்தை முன்வைத்தமைக்குத் தேடிக் கண்டடைந்த காரணம் பொருத்தமானதாக இருக்கின்றது. ஆனால் னகரத்தைப் பின் வைத்தமைக்கான காரணம் அவர்கள் காலத்திய வீடுபேறு குறித்த சமயம் சார்ந்த கருத்தியலின் தாக்கத்தால் இத்தகைய முடிவுக்கு வந்திருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது. ஆண்களுக்கு மட்டுமே வீடுபேறு என்பது ஆணாதிக்க சமூகத்தின் ஆதிக்கத்தையும், பெண்கள் அத்தகைய தகுதியற்ற உடமைப் பொருளாகக் கருதப்பட்டுள்ளனர் என்ற உண்மையையும் வெட்டவெளிச்சமாக்குகின்றது.

இத்தகையதோர் எண்ணத்தோடுதான் தொல்காப்பியர் னகரத்தைப் பின் வைத்துள்ளாரா என்றால், அதற்கான ஆதாரம் இந்த நூற்பாவில் இல்லை. அவர் மிகத்தெளிவாகத் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள் எவை என்பதைப் பேசுகின்றார். தமிழின் முதல் எழுத்துக்கள் முப்பது என்பதைக் கூறுவதற்கு அவற்றில் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் அடையாளம் காட்டுவதன் மூலம் (அக்காலத்தில் வழக்கில் உள்ள மொழியின்) இடையில் உள்ள எழுத்துக்களை எளிதாக உணர்ந்துகொள்ள முடியும் என்ற நோக்கத்தோடுதான் இத்தகைய நூற்பாவை அவர் உருவாக்கியிருக்க முடியும். பின்னரும் அவற்றை எவை என்று விளக்கிச் செல்கின்ற நூற்பாக்களை அமைத்துள்ளமையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் வீடுபேறு குறித்த கருத்தாக்கத்தை நாம் அவர்கள் காலத்திய கருத்தியல் ஆதிக்கத்தின் விளைவு என்று மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.

This entry was posted in முகப்பு. Bookmark the permalink.

7 Responses to தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 1.நூன்மரபு, பாடம்01 எழுத்துக்களின் வகை

 1. Sowmyan சொல்கிறார்:

  உங்கள் காணொலிகளைக் கண்டேன். ஐந்துடன் நிறுத்திவிட்டிர்களே! நேரடியாக படித்திருந்தாலும், உங்கள் பகிர்தல் தெளிவாக இருந்தது.

  என் தேவை ஒலிகளைப்பற்றியது. க, ச, ட, த, ப, ஆகியவற்றின் மயக்கம் குறித்த தகவல் பயனுள்ளதாக இருந்தது.

  குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய எழுத்துக்களுக்கு அவற்றை இசைக்கும் முறை பற்றிய தெளிவு பெற மேலும் பல உதாரணங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  ஐ மற்றும் அய், ஔ மற்றும் அவ், இவற்றின் வேறுபாடு பற்றி வேறொரு காணொலி மூலம் அறிந்தேன்.

  மெல்லின ன-கரத்தின் முன், வல்லின ற-கரம் dra என்பது போல் ஒலிக்கும் என்பதுடன், சில இடங்களில் ற-கரம் tra போல் ஒலிப்பதைப்பற்றியும் அறிய அவா. உதாரணம்: மற்ற, கற்ற.

  பல எடுத்துக்காட்டுகள் பழக்கத்தில் இல்லாத சொற்களாக இருப்பதால் மயக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது புரியவில்லை. சில இடங்களில், எடுத்துக்காட்டுகள் அறிந்ததாய் இருப்பினும் புரியவில்லை. இவற்றை தெளிவிக்க சரியான இசை, தவறான இசை இரண்டையும் கூறினால் நன்றாக இருக்கும்.

  1) ல, ள ஃகான் முன்னர் தோன்றும் ய, வ
  2) ண ன ஃகான் முன்னர் தோன்றும் ம, ய, வ
  3) ஞ, ந, ம, வ வென்னும் புள்ளி முன் ய ஃகான் நிற்றல்
  4) ம ஃகான் புள்ளி முன் ய, வ தோன்றல்
  5) ய, ர, ழ வென்னும் புள்ளி முன் வரும் முதலாகெழுத்து, ங-கரம்

  Text to Speech மென்பொருளின்று வெளிப்படும் ஒலிகளை சோதிக்கும் சேவையை volunteer என்ற முறையில் செய்ய ஒரு அன்பர் கேட்டுள்ளார். ஏற்றுக் கொண்டிருக்கிறேன். உங்கள் விளக்கம் அதற்கு பயன்படும்.

 2. kambane2010@gmail.comk சொல்கிறார்:

  வணக்கம்!

  முன்னைத் தமிழன் மொழிந்ததொல் காப்பியம்
  உன்னை உயர்த்தும் உணர்ந்திடுக! – என்றமிழா!
  செந்தில் குமார்தந்த சீர்மை விளக்கத்தால்
  சிந்தை செழிக்கும் சிறந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

 3. அன்பரசன் சொல்கிறார்:

  மிக்க நன்றி ஐயா .

 4. முனைவர் ஆ. மணி சொல்கிறார்:

  நன்முயற்சி. பாராட்டுக்கள்.

 5. muthu சொல்கிறார்:

  பாராட்டத்தக்க நன்முயற்சி.

  உயிர் ஒலி என்பது வாயினுள்ளே மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒட்டாமால் ஏற்படுத்தப்படும் ஒலி. மெய் ஒலி என்பது அவ்விரு பகுதிகளும் ஒட்டிப்பிரிவதால் உண்டாகும் ஒலி. ஒட்டுவதால் மட்டுமே ஒலி உண்டாகாது என்பதால்தான், மெய் ஒலி தனித்துவராமல், உயிர்மெய் (மெய்யுயிர்) ஆக ஒலிக்கப்படுகிறது. இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டால், மெய்யெழுத்துக்களின் வரிசைப்படுத்துதலில் ஒரு ஒழுங்கு இருப்பது புரியும்.

  க், ங் — வாயினுள்ளே, நாக்கின் பின்பகுதியும் மேலண்ணத்தின் பின்பகுதியும் ஒட்டுகின்றன.

  ச்,ஞ் – சற்று முன்னால் உள்ள பகுதிகள் ஒட்டுகின்றன.

  ட், ண் – நாக்கு வளைந்து சென்று அதன் அடி நுனி, மேலண்ணத்தின் பகுதியைத் தொடுகிறது.

  த், ந் – நாக்கின் மேல் நுனி பற்களைத் தொடுகிறது.

  ப், ம் – உதடுகள் ஒட்டுகின்றன.

  அதாவது, தொட்டுக்கொள்கின்ற மேல்-கீழ் பகுதிகள், அடுத்தடுத்து உள்ளிருந்து வெளிநோக்கிய வாக்கில் இருக்கின்றன.

  ய், ர், ல்,வ் – உள்ளிருந்து வெளிநோக்கி வருகின்றன.

  ழ், ள், ற், ன் உள்ளிருந்து வெளிநோக்கி வருகின்றன.

  ககரம் தொடங்கி வகரம் வரை வருவது வடமொழியின் எழுத்து வரிசையைப் பின்பற்றி வைக்கப்பட்டுள்ளன என்றும், வடமொழியில் இல்லாத ழ், ற், ன் இறுதியாகச் சேர்க்கப்பட்டன என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் இக்கருத்தானது, வடமொழியில் உள்ள ளகரத்திற்குப் பிறகு ழகரம் வைக்கப்பட்டிருந்தால் ஒருவேளை ஏற்புடையதாக இருந்திருக்கும். மேலும், வடமொழி-தென்மொழிச் சண்டையில், வடமொழி முந்தியா, தமிழ் முந்தியா என்பது முழுமையாகத் தீர்க்கப்படாத ஒன்று.

  அதனால், னகரம் ஏன் இறுதியில் வைக்கப்பட்டது என்னும் கேள்வியைவிட, உள்ளிருந்து வெளியே என்னும் நுட்பத்தின்படி, னகரத்தைப் பலுக்கும் பகுதிகளைவிட புறத்தே உள்ள உதடுகளால் ஒலிக்கப்படும் பகரமோ, மகரமோ ஏன் இறுதியில் இல்லை என்னும் கேள்வி பொருத்தமாக இருக்கும்.

  வல்லினத்தையும், அதற்கு இனமான மெல்லினத்தையும் முதலில் வரிசைப்படுத்திவிட்டு, இடையினத்தை இறுதியில் வைத்தார்கள் என்று வாதித்தாலும் கூட, னகரத்தைவிட புறத்தே பலுக்கப்படும் வகரத்தை ஏன் இறுதியில் வைக்கவில்லை என்னும் கேள்வியும் எழக்கூடும்.

 6. Harani சொல்கிறார்:

  அன்புள்ள..

  வணக்கமுடன் ஹரணி.

  உண்மையில் பெருமையாக உள்ளது. இந்தப் பதிவு நாளைய வரலர்ற்றின் மிக அழுத்தமான சிறப்பையும் தேவையையும் இருப்பையும் உணர்த்தப்போகிறது. தொடர்ந்து வருவேன். ஏனென்றால் இத்தகைய கனவுகள் என்னுள்ளும் நெருப்பாய் கனன்றுகொண்டிருக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s